உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது எனவும் இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன எனவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் 257 பேரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர் எனவும் கூறியுள்ளது.
அதோடு, கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூறியுள்ள ஒன்றிய அரசு, தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.