மேட்டுப்பாளையம் அருகே நிக்ழந்த சாலை விபத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி திவ்ய பிரியா உயிரிழந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தியான திவ்ய பிரியா, மதுரையில் பல் மருத்துவராக உள்ளார்.
இவர், அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களுடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றுள்ளனர்.பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, கார், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்தபோது, பிரேக் பிடிக்காததால் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் திவ்ய பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.