தமிழ்நாடு- கேரளா மாநில எல்லையில்அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கண்ணகி அம்மனை வழிபட்டனர்.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே, தமிழ்நாடு – கேரளா மாநில எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கல தேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டின் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாட்டின் தேனி, கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து செய்துள்ளனர்.
இதையொட்டி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து கண்ணகி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவை காண்பதற்கு தமிழ்நாடு – கேரள மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கண்ணகி அம்மனை வழிபட்டனர்.