தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகர் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுதாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பபெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
போட்டி ஏற்பட்டால் ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் பெரும்பாலும் போட்டி இருக்காது என்பதால், பல ஆண்டுகளாக வேட்பாளர்கள் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.