சேலம் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் இன்று (மே 29) மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள முக்கிய குறைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை விவாதித்தனர்.இதில் அதிமுக தலைவர் “டெண்டர்கள் முறைகேடு” குறித்து குற்றச்சாட்டை முன் வைத்தார்.அதாவது மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி எழுந்து, மாநகராட்சியில் கட்டிட அனுமதிகள் முறையற்ற வகையில் வழங்கப்படுகின்றன என்றும், முக்கிய டெண்டர்கள் திமுக அமைச்சருக்கு நெருக்கமக இருப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன என்றும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
திமுக கவுன்சிலர் சுகாசினி தாக்குதல்:
இக்குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், யாதவ மூர்த்தியைச் சுற்றி வளைத்து அவரிடம் கேள்வி எழுப்பினர். சிலர் அவர்மீது ஆவணங்களை வீசினர். இதனையடுத்து திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து யாதவ மூர்த்தியின் அருகே சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில், சுகாசினி கோபத்தில் அவர் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா:
இதனைத்தொடர்ந்து, தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க அதிமுக கவுன்சிலர்கள் மேயரின் மேஜை முன்பாக உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மற்றும் தாக்குதலால் அதிமுக தலைவர் யாதவ மூர்த்தி மற்றும் அதிமுக பெண் கவுன்சிலர் சசிகலா மயங்கி விழுந்தனர். இருவரும் அதிமுக தொண்டர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவத்திற்கு பின்னர் திமுக கவுன்சிலர் சுகாசினியும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை கட்டுப்படுத்த மாவட்ட போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இந்த மோதலால் கூட்டத்தில் அமைதி பாதிக்கப்பட்டது.பிரச்சினை மேலும் தீவிரமாகாமல் இருக்க மேயர் ராமச்சந்திரனும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனும் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.இந்நிலையில் கூட்டம் முடிவுக்கு வந்தது.
மக்கள் மன்றத்தில் வன்முறை:
மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நகர மாமன்றத்தில், உள்ளாட்சி உறுப்பினர்கள் தங்கள் வேறுபட்ட கருத்துகளை வன்முறையாக வெளிப்படுத்துவது ஜனநாயகத் தர்மத்திற்கு நேர்ந்த பெரும் இழுக்கு.மக்கள் பிரச்சனைகள்குறித்து உரையாட வேண்டிய தருணத்தில், கட்சி அரசியலால் இது போன்ற மோதல்கள் ஏற்படுவது வருத்தத்திற்குரியது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது.
தாக்குதல்குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதுகாப்பு ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், உள்ளாட்சி அமைப்புகளின் மரியாதையையும், மக்களுக்கு நேரிடையாக செயற்பட வேண்டிய கவுன்சிலர்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குரியக்கியுள்ளது.
























