கமுதி, ஜூலை 12, 2025: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் ஏற்பாட்டில், ஆனி மாத முழு நிலவு பௌர்ணமி திருநாளை முன்னிட்டு, பசும்பொன் தேவர் திருக்கோவிலில் தரிசனத்தைத் தொடர்ந்து, கமுதி தேவர் திருமண மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
வழக்கறிஞர் மு. ஆறுமுகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கமுதி தாலுகா மறவர் சங்கத் தலைவர் பி. செல்லத்தேவர், செயலாளர் கே. ராமமூர்த்தி, பொருளாளர் கே. முத்து ஆகியோர் தலைமையேற்றனர். மூவேந்தர் பண்பாட்டு கழகத் தலைவர் இராமையாத்தேவர், கமுதி பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. முக்கூரான், செயலாளர் வழக்கறிஞர் சு. முத்துராமலிங்கம், பொருளாளர் கோட்டை இளங்கோவன், மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆசிரியர் எம்.ஏ. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மறவர் சங்கப் பொருளாளர் செல்லப்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், சமீபத்தில் மறைந்த தர்மலிங்கத்தேவர், ராமச்சந்திரபூபதி, சிந்தனை மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மதுரை முத்துராமலிங்கம், பெருங்கவிக்கோ சேதுராமன், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பசும்பொன் பாண்டியனின் சிறப்புரை
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய வலிமை ஆசிரியர் நேதாஜி வே. சுவாமிநாதன் மற்றும் தேவரின் வரலாற்று ஆய்வாளரும், முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவருமான வி.எஸ். நவமணி ஆகியோர், பசும்பொன் தேவரின் ஆன்மீகக் கருத்துகளையும், வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் (பசும்பொன்) பிரிவின் பொதுச் செயலாளர் ந. பசும்பொன் பாண்டியன், தனது உரையில், “பசும்பொன் தேவர் முற்றும் துறந்த ஞானி. 1930-களில் காங்கிரஸ் பேரியக்கத்தில் மிகப்பெரிய தலைவர்கள் ஒன்றிணைந்தபோதிலும், அனைவரையும் எதிர்த்து, தென்னாட்டு சிங்கமான பசும்பொன் தேவர், வங்கத்து சிங்கமான வைரநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து வெற்றி பெற்றவர். சுவாமி விவேகானந்தரின் வழித்தோன்றல்களாக உருவான நேதாஜியும், பசும்பொன் தேவரும் உருவாக்கிய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியால் வீழ்ச்சியடைந்தது,” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “1970-களில் ஐந்து முதல் பத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், மேலவை உறுப்பினரையும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி, திமுக ஆட்சிக்கு அடித்தளமிட்டது. ஆனால், தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால், கட்சியின் செல்வாக்கு இழக்கப்பட்டது. இதற்கு திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியே காரணம். இனி, அனைவரும் ஒன்றிணைந்து பார்வர்ட் பிளாக் கட்சியைக் காப்பாற்ற வேண்டும். பசும்பொன் தேவர் பிறவியிலேயே ஞானம் பெற்ற மாமனிதர்,” என்று பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தினார்.
விருது வழங்கல் மற்றும் பங்கேற்பு
நிகழ்ச்சியில், சிந்தனை மன்றத்தின் சார்பாக ந. பசும்பொன் பாண்டியனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி “பசும்பொன் தேவர் எழுச்சி நாயகன்” விருது வழங்கப்பட்டது. மேலும், கமுதி தாலுக மறவர் சங்க நிர்வாகிகளுக்கு “பசும்பொன் தேவர் திருப்பணி நாயகர்கள்” விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பழனி, இராமர், பார்வர்ட் பிளாக் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம், பேராசிரியர்கள் நீரா பொன்முத்து, ஆதிமூலம், வாகை பாண்டியன், சண்முகமூர்த்தி, ஆசிரியர் முத்துராமலிங்கம், தர்மர், கமலநாதன், போஸ்தேவர், உயர்மட்டக் குழு உறுப்பினர் மு. வெள்ளைப்பாண்டியன், ஜாகிர் உசேன், சிந்தனை மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சோழவந்தான் ரமேஷ், ராஜபாண்டி, தஞ்சாவூர் மேற்கொண்டார் உள்ளிட்ட பலரும், பெரியோர்கள், சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர் குடிக்கினியான் முத்துகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.