செங்கல்பட்டு அருகே, லாரியை கடத்தி சென்ற மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பவர் போல் நடித்து காவல்துறையினரை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பு என்பவரின் லாரியை கமலக்கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த லாரியில் செங்கல்பட்டு பகுதியில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் நிறுத்திய ஓட்டுனர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்திய சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை எடுத்து, சென்னையை நோக்கி இயக்கி சென்ற நிலையில் லாரி ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில், ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இந்த தகவல்களை அருகில் இருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழியாக, பரிமாறினர்.
இதனையடுத்து, மகேந்திரா சிட்டிசிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போலீசார் பேரிகாட்டுகள் ஆகியவற்றை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
மறுபுறம் இருசக்கர வாகனத்தில் போலீசார் லாரியை வேகமாக பின் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாவகமாக போலீசார் ஒருவர் லாரியில் ஏறி, ஓட்டுனரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார்.
ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றே போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் துரத்தி சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, லாரியைக் கடத்தியவர் நெல்லையைச் சேர்ந்த சுபாஷ் என்பதும் கடந்த இரண்டு நாட்களூக்கு முன்பு ஊரப்பாக்கத்தில் டீ கடையில் பிரச்சனையில் ஈடுபட்டதும், அதற்கு முந்தைய நாள் அங்குள்ள ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது