சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்
சென்னை: ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், சனாதன தர்மம் குறித்து மிகத் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சனாதன தர்மத்தை குருட்டு நம்பிக்கையாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.
“சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல. அது மனிதகுலத்திற்கு அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல். சனாதன விவகாரத்தில் யாரும் நம்மைத் தாக்குவதற்கு துணியாதபடி குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்துக்கள், தர்மத்தை கடைபிடிக்க சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. இதுபோன்று மீண்டும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புடன் இருக்க வேண்டும். சனாதன தர்மமும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் ஒரே இலக்கை நோக்கி செல்கின்றன” என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் திராவிட மாடல் ஆதரவாளர்களால் தொடர்ச்சியாக சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பவன் கல்யாண், இந்து சமூகம் ஒன்றிணைந்து தன் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக, தமிழகத்தில் கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மூலம் இந்து சமூகத்திற்கு ஏற்பட்ட அநீதிகள், சட்டப் போராட்டங்கள் மூலமே தீர்க்கப்பட்ட நிலையில், இனியும் அத்தகைய போராட்டங்களுக்கு இடம் தரக்கூடாது என்று அவர் அழைப்பு விடுத்தார்.
சனாதன தர்மமும் இந்திய அரசியலமைப்பும் ஒரே நோக்கம் கொண்டவை என்ற அவரது கூற்று, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சமத்துவம், சகோதரத்துவம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சனாதன தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் தொடர்ந்து சனாதன தர்ம பாதுகாப்பு குறித்து குரல் எழுப்பி வரும் நிலையில், பவன் கல்யாணின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்து சமூகம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற அவரது அழைப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
























