தடைகளை முறித்து வருவது தான் வெற்றி:
புதுக்கோட்டை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இதன்போது, தேமுதிகவின் 20 ஆண்டு கால பயணத்தில் மறக்க முடியாத நினைவாக கேப்டன் விஜயகாந்தை குறிப்பிட்டார். “திமுக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய பிரேமலதா, “விஜய் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தேமுதிகவும் கடந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் கட்சி தொடங்கியபோது இதேபோன்ற தடைகளை சந்தித்தார். எந்த தலைவர்களின் ஆதரவும் இல்லாமல், ஒற்றை மனிதராக கட்சியை தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றவர் கேப்டன்,” என்று பெருமையுடன் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும், தேசிய கட்சிகளும் உள்ளன. இதனால் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த தடைகளை முறித்து வருவது தான் வெற்றி. விஜய், கேப்டனை பின்பற்றி வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்,” என்று கூறினார். விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை வரவேற்பதாகவும், அதிகாரம் பகிரப்படும்போது மக்களுக்காக சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் தயாராக இருப்பதாகவும், கூட்டணி குறித்த அறிவிப்பு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்றும் பிரேமலதா கூறினார். “எம்ஜிஆர், கேப்டன் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். விஜய்யும் அவர்களைப் பற்றி பேசி வருகிறார். கேப்டனை ‘அண்ணன்’ என்று அழைப்பதால், நாங்கள் விஜய்யை ‘தம்பி’ என்று அழைக்கிறோம்,” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் கட்டடங்களையும், எம்எல்ஏக்களையும் இழந்தோம். ஆனால், அரசியலுக்கு வந்ததால் கேப்டனையே இழந்து விட்டோம். இதைவிட பெரிய இழப்பு எங்களுக்கு இல்லை,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.






















