Site icon No #1 Independent Digital News Publisher

கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கோவை மாவட்டத்தை உலுக்கிய 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி என்ற இளைஞர் குறித்து போலீசார் வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அப்பகுதியில் கடந்த 20 முதல் 25 நாட்களாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 21ஆம் தேதி மாலை 5 மணியளவில், அந்த 10 வயது சிறுமி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 250 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த காட்சிகளில், சிறுமியை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட கார்த்தி என்பவர் போலீசாரின் கண்காணிப்பில் வந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்தி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை மறைக்க முயன்ற அவர், சிறுமியை மாடியில் இருந்து கீழே தள்ளியதாகவும், அதன் காரணமாக சிறுமிக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகும் சிறுமி உயிருடன் இருந்ததை அறிந்த கார்த்தி, அவரை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு கொண்டு சென்று கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கார்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்தி, சி.வி வேலை பார்த்தவர் என்றும், திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவரது இரண்டாவது மனைவியும் அவரை பிரிந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறால் மனஉளைச்சலில் இருந்த கார்த்தி, மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும், போதை நிலையில் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் மேலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version