சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது வருகிறது. தாம்பரம், குரேம்பேட்டை, வண்டலூர், முடிச்சூர், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே, சென்னையில் இந்த மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. அதன்பிறகு வானிலை நிலவரம் சரியானவுடன் விமானங்கள் தாமதமாக தரையிறங்கின