டெல்லியில், பிரதமர் தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
ஆண்டுக்கு ஒருமுறை இதன் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாகக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட நிலுவை நிதிகளை விடுவிக்க வலியுறுத்துகிறார் என கூறப்படுகிறது.