மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாகடந்த 12 ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்றார்.
பின்னர், ராமராயர் மண்டகப்படியில் குழுமியிருந்த திரளான பக்தர் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என முழக்கமிட்டு கள்ளழகரை வழிபட்டனர்.
அதோடு பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். அதன் தொடர்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதை தொடர்ந்து விழாவின் 6ஆம் நாள் சிகர நிகழ்வாக வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
அதற்கு பிறகு நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கள்ளழகருக்கு தசாவதாரம் நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் 7ஆம் நாள் திருவிழாவின் மாலை நிகழ்வாக கள்ளழகர்,ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் அழகர் வீரராகவ பெருமாள் சந்திப்பு மண்டகப்படிகளில் ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி சுமார் 4000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது குறிப்பிட்ட தக்கது.