தமிழ்நாட்டில் எம்ஜிஆர் க்கு பின் அரசியலுக்கு
வந்த எந்த நடிகர் நடிகையையும் அவரோடு ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் 1972இல் அதிமுகவைத் தன்னுடைய 55வது வயதில் தொடங்கினார் என்றாலும், அதற்கு முன்னரே கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் அரசியலோடு அவருக்குத் தொடர்பு இருந்தது; காங்கிரஸில் 20 ஆண்டு, திமுகவில் 20 ஆண்டு காலம் எம்ஜிஆர் பயணித்தார்.
சினிமாவில் இருந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகளை உரக்கப் பேசுவதிலும், அரசியல் எதிரிகளைச் சாடுவதிலும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும் எம்ஜிஆருக்குத் தயக்கம் இருக்கவில்லை.அவருடையத் திரைப்படங்கள் பல சமயங்களில் தடைக்கான அச்சுறுத்தலை எதிர்கொண்டே கடந்து வந்தன.
அதிமுகவை 1972இல் ஆரம்பித்தபோது தமிழ்நாடு முழுவதும் 20,000 த்திற்கும் மேல் ரசிகர் மன்றக் கிளைகள் எம்ஜிஆருக்கு இருந்தன. இது அன்றைக்கு ஆளும் கட்சியான திமுக விற்கு இணையான எண்ணிக்கை என தகவல்.ரசிகர் மன்றக் கிளைகளைக் கிட்டத்தட்ட ஓர் அரசியல் கட்சி அமைப்பு போலவே எம்ஜிஆர் உருவாக்கியிருந்தார். எம்ஜிஆர் தன்னுடைய திரைப்படங்கள் வழியே ஓர் அரசியலைக் கட்டமைத்தார்.
சமூகத்தில் ஆழ இறங்கி அனைவரும் சமம் என பழகியவர் எம்ஜிஆர்.அன்றாடம் பல நூறு பேர்களை அவர் சந்தித்தார். அடித்தட்டு மக்களுடன் அவருக்கு நெருக்கமான உரையாடல் அவரின் இறுதி காலம் வரை இருந்தது.
எம்ஜிஆருக்குப் பிந்தைய நடிகர்கள் எவரையும் இந்தப் பின்புலத்தோடு நாம் ஒப்பிட முடியாது.
ஆகவே மேற்படி சொன்ன எந்த அனுபவமும், சமூக செயற்பாடுகளும் , மக்கள் உடனான அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களும் விஜய் அவர்களுக்கு கிடையாது அரசியலுக்கு வந்த பின் அவருடைய செயல்பாடுகளைக் கொண்டுதான் நாம் அவரை மதிப்பிடமுடியும்.
ஆகவே பொருத்திருந்து பார்ப்போம் நடிகர் விஜய்க்கு நம்முடைய வாழ்த்துகள்.



















