Site icon No #1 Independent Digital News Publisher

‘தக் லைஃப்’ விவகாரத்தை சுமுகமாக முடிக்க வேண்டும்” -தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை !

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தக் லைஃப்’ .இந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணி நிகழ்வில், கன்னட மொழி தொடர்பாக நடிகர் கமல் பேசிய போது தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கூறியது தற்போது விவாதப் பொருளானது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் ஏழுந்துள்ளது . ஆனால், கமல்ஹாசன் தாம் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கேட்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்நாடகாவில் ’தக் லைஃப்’ படம் வெளியாகாது” என கன்னட பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கோரி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல் மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் கமல்ஹாசனிடம், ”மொழி குறித்து பேசுவதற்கு நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? அல்லது வரலாற்று ஆய்வாளரா? தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கூற உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது.மேலும், கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ” எனவும் கேள்வி எழுப்பியது .

இதற்கிடையே, கர்நாடகா திரைப்பட சம்மேளனத்திற்கு தனது கருத்து குறித்து, விளக்கம் அளித்து நடிகர் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் ’நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆகையால், இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ”கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்“ என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக அமைப்பு, ”கமலின் ’தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிட விரும்புகிறோம். பிரச்னையைப் பேசித் தீர்த்து ’தக் லைஃப்’ படத்தை வெளியிடுவதற்கான வழியைப் பார்ப்போம். கர்நாடகாவில் கமலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசனுடன் தயாராக உள்ளோம்” என அது தெரிவித்துள்ளது.

மறுபுறம், தக்லைஃப் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கர்நாடக திரைப்பட சம்மேளனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ”இரு திரையுலகமும் இதுவரை எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது. ஆகையால், ‘தக் லைஃப்’ விவகாரத்தை சுமுகமாக முடிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version