சிக்மண்ட் ஃப்ராய்டை எளிமையாக அறிமுகப்படுத்தும் முக்கிய நூல்

— ‘சிக்மன் பிராய்ட்: வாழ்வும் உளவியலும்’ புத்தகத்திற்கு வரவேற்பு
உளவியல் துறையின் தந்தையாக உலகம் ஏற்றுக் கொண்ட சிக்மண்ட் ஃப்ராய்டைப் பற்றி தமிழில் இதுவரை பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, உளவியல் ஆய்வுகள், சர்ச்சைக்குரிய கோட்பாடுகள் என பல்வேறு கோணங்களில் ஃப்ராய்டை அணுகிய படைப்புகள் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமானவையே. அந்த வரிசையில், எழுத்தாளர் எஸ். சரத்குமார் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சிக்மன் பிராய்ட்: வாழ்வும் உளவியலும்’ என்ற நூல், தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

உளவியல் குறித்த முன்அறிமுகம் இல்லாதவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது. ஃப்ராய்டைப் பற்றி தெரிந்து கொள்வதைவிட, வாசகர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவியாக இந்தப் புத்தகம் அமைகிறது என்பதே இதன் முக்கியத்துவம்.
ஃப்ராய்டின் பிறப்பிலிருந்து இறப்புவரையிலான வாழ்க்கை வரலாற்றை அழகான கட்டமைப்புடன் நூலில் ஆசிரியர் வழங்கியுள்ளார். ஒரு பக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்கள், மறுபக்கம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது உளவியல் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் — இவை அனைத்தும் மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன.
மனித வாழ்வியல், அரசியல், கலை, இலக்கியம், உயிரியல், உளவியல் என பல துறைகளில் மனித சிந்தனைக்கு அடித்தளம் அமைத்தவர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின் ஆகியோருடன் சேர்த்து நினைக்க வேண்டிய முக்கிய ஆளுமையாக சிக்மண்ட் ஃப்ராய்ட் விளங்குகிறார். அந்த பெருமையை இந்த நூல் வாசகர்களுக்கு தெளிவாக உணர்த்துகிறது.

வாசகர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய தொழில் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், இந்த நூலை ஒருமுறையாவது படிக்க வேண்டிய தேவை உள்ளது. உளவியலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என நினைப்பவர்களுக்குக் கூட, இந்தப் புத்தகம் புதிய சிந்தனை கதவுகளைத் திறக்கிறது; வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை ஆர்வத்துடனும் புரிதலுடனும் அணுக உதவுகிறது.
எழுத்தாளர் சரத்குமார் இதுபோன்ற மேலும் பல அரிய நூல்களை தொடர்ந்து இலக்கிய உலகிற்கு வழங்க வேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரே முறை வாசித்து வைத்துவிடும் நூலாக அல்லாமல், “நான் யார்?” என்ற கேள்வி எழும் ஒவ்வொரு தருணத்திலும் மீண்டும் மீண்டும் அணுக வேண்டிய ஒரு முக்கியமான வழிகாட்டி நூலாக ‘சிக்மன் பிராய்ட்: வாழ்வும் உளவியலும்’ திகழ்கிறது.
— ஊடகவியலாளர் சமரன்






















