சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் பாய்ந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்னி வேனில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிணறு இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது.
பொக்லைன் மூலம் நடந்த மீட்பு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மீட்புக்குழு வீரர்கள் மீட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் கிணற்றில் இருந்து வேன் மீட்கப்பட்டது.
வேனில் இருந்து 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மீட்புப் பணி நடைபெற்ற இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்து பார்வையிட்டார். ஆம்னி வேன் கிணற்றில் விழுந்து, ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது