320 கோடி ரூபாய் செலவில் கட்டிய பள்ளிபாளையம் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே விரிசல்களுடன் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.320 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க இருந்தார். ஆனால், விழா நடைபெறும் முன்னே, மேம்பாலத்தில் விரிசல்கள் இருப்பதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சோதனை செய்யச் சென்றனர். தொட்டாலே இடிந்து விழும் நிலையில் அந்த மேம்பாலம் காணப்பட்டது. இதனால் விழா ரத்தாகாதபோதிலும், அரசின் பொறுப்பு, நிர்வாக அலட்சியம், கட்டுமான தரம் என்ன ஆனது எனப் பல கேள்விகள் எழுகின்றன.மக்களிடையே நம்பிக்கையைக் குலைக்கும் இச்சம்பவம், தமிழ்நாட்டின் நிர்வாகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தரக் குறைபாடா? கண்காணிப்பு தவறா?
முதலமைச்சர் நேரில் பங்கேற்கும் நிகழ்வாக இருந்ததாலும், இத்தனை கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் முறையாகக் கட்டப்பட்டதா? தரமான பொருட்களைக்கொண்டு வேலை நடந்ததா? அதிகாரிகள் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க தவறியதா? இவை அனைத்திற்கும் நாம் பதில் தேட வேண்டியது முக்கியம்.
- மேம்பால கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்த பொறியாளர்கள் யார்?
- மாவட்ட ஆட்சியர், பொது வேலைத் துறை அதிகாரிகள் நேரில் எதைக் கண்காணித்தார்கள்?
- கட்டுமானத்தில் குறைபாடுகள் இருந்தபோது அதை ஏன் முன்பே கண்டறியவில்லை?
- முதலமைச்சரின் பாதுகாப்பை கூடப் புறக்கணிக்கச் செய்யும் அளவிற்கு இந்த அலட்சியம் ஏன்?
(அலட்சியம் = பொறுப்பு இல்லாத நிர்வாகம்)
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாலம் போன்ற மிகப்பெரிய பொது நலத் திட்டங்களில், இத்தகைய அலட்சியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது வெறும் தொழில்நுட்ப தவறு மட்டுமல்ல; நிர்வாகப் பொறுப்பு தளர்வடைந்து விட்டது என்றெ கூறலாம். முன்னதாகவே பணி நிறைவுச்சான்று வழங்கப்பட்டுள்ள திட்டத்தில் இது போன்ற புகார்கள் எழுந்திருப்பதால், அதன் ஒப்பந்த முறையையும், வேலை செய்யும் தனியார் நிறுவனம் குறித்தும் ஆழமான விசாரணை தேவைப்படுகிறது.
இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மக்கள் கேட்கும் முக்கியமான கேள்வி:
- பள்ளிபாளையம் மேம்பாலம் கட்டுமானத்தை முடிவடைந்ததாக ஒப்புதல் அளித்தவர் யார்?
- மேற்பார்வை செய்த பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் யார்?
- தரக்குறைவுக்குப் பிறகு கூட விழா நடத்த திட்டமிட்டவர்கள் யார்?
இவையெல்லாம் பொதுமக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான பதில்கள்.
கடுமையான நடவடிக்கைகள் தேவை இது போன்ற சம்பவங்களுக்குப் பின் வழக்கம்போல “கீழ்மட்ட ஊழியர்களை” பழி சுமத்துவது கூடாது. விசாரணை நடக்க வேண்டும். ஆனால் அது அரசியல் மூடிய விசாரணையாக அல்ல. சுயாதீனமான, தொழில்நுட்பம் சார்ந்த, மக்கள் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் நடக்க வேண்டும்.
பொதுமக்களுக்கான பரிந்துரை:
1)சம்பந்தப்பட்ட திட்ட ஆவணங்கள், ஒப்பந்த விவரங்கள், தரச் சோதனை அறிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்குத் கொண்டுவர வேண்டும்.
2)உயர் மட்ட பொறுப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
3) இனி மேற்கொள்ளப்படும் அனைத்து பெரிய பொது திட்டங்களிலும் மூன்றாம் தரப்பு தரச் சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
பொதுநலத்திற்காகச் செய்யப்படும் திட்டங்களில் மக்கள் பாதுகாப்பு, நம்பிக்கை, மற்றும் மக்களின் உரிமைகள் முக்கியம். அலட்சியம் என்பது ஒரு குற்றமல்ல; அது மறைமுகமான கொலை. எனவேநிர்வாகம் கட்டாயம் உணர வேண்டிய நேரமிது.
இது வெறும் கட்டுரை அல்ல.. இது மக்கள் உரிமைக்கான கூச்சல்!
– ஜனநாயகன்