Site icon No #1 Independent Digital News Publisher

காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பில் மரண மர்மம்: ஒரே மாதத்தில் மூன்று நடிகர்கள் உயிரிழப்பு

காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பில் மரண மர்மம்: ஒரே மாதத்தில் மூன்று நடிகர்கள் உயிரிழப்பு

கர்நாடகா: ‘காந்தாரா சாப்டர் 1’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மூன்று மரணங்கள் கன்னடத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் மூன்று நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முதல் மரணம் நடிகர் ராகேஷ் புஜாரியின் (33) மரணமாகும். இவர் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இரண்டாவதாக, கேரளாவைச் சேர்ந்த துணை நடிகர் கபில், கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தேடியபோது, அவரது உடல் மாலையில் கண்டெடுக்கப்பட்டது.மூன்றாவதாக, கேரளாவைச் சேர்ந்த நடிகர் விஜூ வி.கே, கர்நாடகாவின் தீர்த்தஹல்லி, ஆகும்பே பகுதியில் படப்பிடிப்புக்காக தங்கியிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த அடுத்தடுத்த மரணங்கள் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ‘காந்தாரா’ படத்தில் மையமாக விளங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் சாபமா என்று சிலர் சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர். இதற்கு முன், படப்பிடிப்பின்போது வெடிபொருட்கள் பயன்படுத்தியதால் உள்ளூர் மக்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமவாசி காயமடைந்ததாகவும், எசலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022இல் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம், 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 400 கோடி வசூலை ஈட்டி பெரும் வெற்றி பெற்றது. இதன் முன்கதையாக உருவாகும் ‘காந்தாரா சாப்டர் 1’ பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. கர்நாடகாவின் கவிகுட்டா, ஹெரூர், குந்தாபுரா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 2இல் படம் வெளியாகவுள்ளது.
இந்த மரணங்களால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மரணங்களுக்கு காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. விசாரணை தொடர்கிறது. பஞ்சுருளி தெய்வத்தின் சாபம் என்ற வதந்திகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றன.இந்த மரணங்கள் தொடர்பான முழு விவரங்களுக்காக காவல்துறை விசாரணையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. படக்குழு மௌனம் காக்கிறது.

Exit mobile version