மே 27, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற Thug Life திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் மேடையில் கன்னட மொழியைப் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .
நடிகர் கமலஹாசன் தனது புதிய திரைப்படமான Thug Life இன் இசை வெளியீட்டு விழாவில்,”கன்னடம் தமிழ் மொழியிலிருந்து தான் பிறந்தது” என்று கூறியதன் பின்னணியில் ஏற்பட்ட சர்ச்சை,தென்னிந்திய மொழி அடையாளங்கள் மற்றும் கலாச்சார உணர்வுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தனது உரையில், “உயிரே உறவே தமிழே” என்று தொடங்கி, கன்னட நடிகர் சிவராஜ்குமாரை குறிப்பிடுகையில், “உங்கள் மொழி தமிழிலிருந்து பிறந்தது, எனவே நீங்கள் என் குடும்பம்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து,கன்னட சமூகத்தில் கடும் எதிர்ப்புகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கமலஹாசனின் இந்த சர்ச்சைப் பேச்சிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா,கமல்ஹாசனின் கருத்தை “வரலாற்று அறியாமை” எனக் கண்டித்துள்ளார்.மேலும் BJP கர்நாடக மாநிலத் தலைவர் B.Y. விஜயேந்திரா, கமல்ஹாசன் “கன்னடத்தை அவமதித்துள்ளார்” எனக் கூறி, மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள், கமல்ஹாசனின் திரைப்பட போஸ்டர்களை கிழித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் இத்தனை விவாதத்திற்கு பிறகு,கமல்ஹாசன் தனது கருத்தை “அன்பில் இருந்து வந்தது” என்ற அடிப்படையில் கூறினேன் என்றும் “மொழி வரலாற்றை அரசியல்வாதிகள் அல்ல, மொழியியல் நிபுணர்கள் விவாதிக்க வேண்டும்” என்றும், “அன்பு மன்னிப்பு கேட்காது” என்றும் தெரிவித்துள்ளார்.அனால் மொழியியல் நிபுணர்கள், தமிழ் மற்றும் கன்னடம் இரண்டும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், இரண்டும் தனித்தனியாக வளர்ந்த மொழிகள் என்றும் கூறுகின்றனர்.இந்த சர்ச்சை,கமல்ஹாசனின் Thug Life திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாகவும், அவரது மாநிலங்களவை நியமனம் குறித்த யூகங்கள் எழுந்திருந்த நேரத்திலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம், தென்னிந்தியாவில் மொழி அடையாளங்கள் மற்றும் கலாச்சார உணர்வுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுகிறது. பொது நலனுக்காக, அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள்,மொழி மற்றும் கலாச்சார விவகாரங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.