Site icon No #1 Independent Digital News Publisher

ஜேன் குடால்: சிம்பன்சி ஆய்வாளர் மறைவு – அறிவியல் உலகிற்கு பேரிழப்பு

புகழ்பெற்ற வன உயிரியலாளரும், சிம்பன்சி குரங்குகள் பற்றிய ஆய்வில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவருமான ஜேன் குடால் (Jane Goodall) மறைந்தார். மனிதர்கள் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள் என்ற உண்மையை இன்றும் பலர் மறுக்கும் நிலையில், சிம்பன்சிகளின் நடத்தைகள், கருவி பயன்பாடு, குழு அரசியல் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, மனித இனத்தின் தோற்றத்திற்கும் விலங்குலகத்திற்கும் இடையேயான இணைப்பை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ஜேன் குடால்.

1950-களில் ஆப்பிரிக்காவில், பிரபல மானுடவியலாளர் லூயிஸ் லீக்கியின் வழிகாட்டுதலின் கீழ், ஜேன் குடால் தனது ஆயவை தொடங்கினார். ஹோமோ ஹெபிலிஸ் போன்ற மனித குரங்கினங்களின் படிமங்களை ஆய்வு செய்த லீக்கியின் மூலமாக, ஜேன் தன்சானியாவின் கோம்பே தேசிய பூங்காவில் சிம்பன்சிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். அவரது ஆய்வுகள், சிம்பன்சிகள் வேட்டையாடுவது, உணவு தேடுவது, கருவிகளை உருவாக்குவது மற்றும் சிக்கலான சமூக அமைப்புகளை பேணுவது ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தின.

நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சிகளின் ஆவணப்படங்கள் மூலம் ஜேன் குடால் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக, எறும்பு புற்றில் உள்ள எறும்புகளை உண்ண ஒரு புல் தண்டைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமாகவும் மதிநுட்பத்துடனும் செயல்படும் சிம்பன்சியின் நடத்தையை விளக்கும் அவரது ஆவணப்படங்கள் மறக்க முடியாதவை. இந்த ஆய்வுகள், மனிதர்களை விலங்குலகத்திலிருந்து தனித்துவமானவர்களாகக் கருதும் மமதையை உடைத்து, நமது இயல்புகளுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமைகளை வெளிப்படுத்தின.

ஜேன் குடால், வன உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்தார். ஜேன் குடால் அறக்கட்டளையை நிறுவி, உலகெங்கிலும் சூழலியல் மற்றும் விலங்கு நலனுக்காக பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதராக பணியாற்றிய அவர், 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியில், “சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பரிவு காட்ட வேண்டும். அறம்சார்ந்த தேர்வுகளை நாம் செய்ய முடியும். காசாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்த வேண்டும். மனித வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பசித்தவர்களுக்கும், விலங்குகளை பாதுகாப்பவர்களுக்கும் நாம் துணை நிற்க வேண்டும்,” என்று கூறினார்.

ஜேன் குடாலின் மறைவு அறிவியல் உலகிற்கு பேரிழப்பு. அவரது ஆய்வுகளும், சுற்றுச்சூழல் மற்றும் மனித நேயத்திற்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றென்றும் நினைவு கூறப்படும்.

Exit mobile version