அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட, அபிசித்தர் அலங்காநல்லூர் கீழக்கரையில் முதல் இடம் பிடித்து, ஒரு கார் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை வென்றார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர அரங்கம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி இந்த அரங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரமாண்ட நுழைவு வாயில், வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மருத்துவமனை, காளைகள் சிற்பக்கூடம் என ஏராளமான வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தை இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியையும் துவக்கி வைத்தார். போட்டியில் 500 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். 10 காளை அடக்கிய அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவற விட்டவருக்கு இந்த முறை முதல் பரிசு கிடைத்துள்ளது.
அபி சித்தருக்கு மகேந்திரா கார் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 6 காளைகளை பிடித்து, 2ம் இடத்தை சின்னம்பட்டி தமிழரசன் மற்றும் பரத் பிடித்துள்ளனர்.