Site icon No #1 Independent Digital News Publisher

‛ இண்டியா’ கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம்!

‛ இண்டியா’ கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

சேலத்தில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: மதுரை அ.தி.மு.க., மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க., மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன. நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத் தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வு, நீட் தேர்வில் தி.மு.க., எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

தி.மு.க., தீர்மானங்கள், மக்களுக்கு உதவும் வகையில் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க., அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும். அக்கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதை பார்ப்போம்.

5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால், ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Exit mobile version