அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் “நிழல் அதிபர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அரசு செலவுகளைச் சீரமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட DOGE (Department of Government Efficiency) என்ற புதிய பிரிவின் தலைவர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பதவியில் இருந்தது வெறும் 130 நாட்களே! (DOGE: அரசு செலவுகளைக் குறைக்கும் புதிய முயற்சி)
DOGE அமைப்பின் நோக்கம் அரசு செலவுகளைக் குறைத்து, வரிப்பணத்தை திறமையாகப் பயன்படுத்துவதே. எலான் மஸ்க் தலைமையில் 2.6 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. 2026ம் ஆண்டிற்குள் $1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அரசு செலவுகளைச் சேமிக்க முடியும் என மஸ்க் தெரிவித்தார்.
பதவி விலகலுக்கான முக்கிய காரணங்கள்:
மஸ்க் தனது பதவி விலகலை உறுதி செய்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, டிரம்ப் அரசு கொண்டு வந்த “Big, Beautiful Bill” எனப்படும் பெரிய செலவுத் திட்டம். இது DOGEஅமைப்பின் அடிப்படை நோக்கங்களைப் புறக்கணிக்கிறது என்று மஸ்க் கூறினார். மேலும்,அவரது நிறுவனமான டெஸ்லாவின் பங்குதாரர்கள், “CEO ஆக நீங்கள் முழு நேரம் வேலை செய்ய வேண்டும்” என அழுத்தம் கொடுத்தனர்.
சீனாவின் நுட்பமான தாக்கம்:
மஸ்க், கடந்த ஆண்டுகளில் சீன அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். சீன துணைத் தலைவர் ஹான் ஜெங், மஸ்க்கை சந்தித்து, “சீனாவுடனான தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும்” எனக் கேட்டுள்ளார். டெஸ்லா, சீன சந்தையில் முக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்–மஸ்க் உறவின் எதிர்காலம்:
பதவியை விட்டுவிட்டாலும், டிரம்ப் நிர்வாகத்தின் ஆலோசகர் என்கிற வேடத்தில் மஸ்க் தொடருவாரென நம்பப்படுகிறது. DOGE அமைப்பின் அதிகாரப்பூர்வ காலம் 2026 ஜூலை 4 ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க், 130 நாட்களில் DOGE அமைப்பின் வாயிலாக அமெரிக்க அரசின் செலவுகளைச் சீரமைக்க முயன்றார். ஆனால், அரசியல் திட்ட முரண்பாடுகள், முதலீட்டாளர்களின் அழுத்தம் மற்றும் சீனாவின் வியூக அரசியலால் அவர் பதவியை விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது உலக அரசியலும் வணிகத் துறையும் சேர்ந்து மாற்றம் அடைந்து, புது கட்டத்தை உருவாக்கக்கூடிய முன் உதாரணமாகத் தெரிகிறது.