டார்வின்: வாழ்வும் அறிவியலும் – அறிவியலை எளிமையாக்கும் ஒரு முக்கிய நூல்

எழுத்தாளர் நன்மாறன் திருநாவுக்கரசு எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் வெளிவந்துள்ள “டார்வின் (வாழ்வும் அறிவியலும்)” நூல், தற்போதைய புத்தகக் கண்காட்சியில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று விற்பனை சூடு பிடித்துள்ளது.
பள்ளி மாணவர்கள்கூட படித்து புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான மொழி நடை மற்றும் தெளிவான விளக்கங்களுடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 250 பக்கங்களில், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சார்லஸ் டார்வின் அவர்களின் வாழ்க்கையும் அறிவியல் பயணமும் முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த கையேடாக இது திகழ்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் எழுத்தாளர் நன்மாறனின் ஆழ்ந்த உழைப்பும் ஆய்வுத் தெளிவும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரே நாளில் வாசித்து முடித்து விடக்கூடிய வகையில் சீரான அமைப்புடன் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
73 ஆண்டுகள் வாழ்ந்த டார்வின் அவர்களின் வாழ்க்கை, இன்றைய உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு முக்கியமான செய்தியை அழுத்தமாகச் சொல்லும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்ட எண்ணற்ற ஆராய்ச்சிகளில் வெற்றியடைந்ததற்கான காரணங்களாக, அவரது கடின உழைப்பு, விடாப்பிடியான மனப்பாங்கு, தொடர் முயற்சி போன்ற சிறந்த பண்புகள் இயற்கையாகவே அவருள் இருந்ததை இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
தன் வாழ்க்கையைத் தானே பகுப்பாய்வு செய்து, சோதனைக்கு உட்படுத்தி, ஒவ்வொரு நகர்வையும் உற்று நோக்கி துல்லியமான புரிதலுடன் வாழ்ந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை பயணமாக டார்வின் இந்நூலில் சித்தரிக்கப்படுகிறார்.
மொத்தத்தில், நன்மாறன் திருநாவுக்கரசு எழுதியுள்ள “டார்வின் (வாழ்வும் அறிவியலும்)” நூல், அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்பும் எல்லோருக்குமான ஒரு முக்கியமான படைப்பாக திகழ்கிறது.
— ஊடகவியலாளர் சமரன்