மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 21 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக 22ஆம் தேதி அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, நாளை கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.