லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற முக்கியமான விசாரணை அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது நீதிபதிகள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.
வழக்கின் போது, தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான அருண் ஐ.பி.எஸ். குறித்து நீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பியது. நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்று சுமார் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவர், சட்ட நடைமுறைகளை நன்கு அறிந்திருந்தும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது திட்டமிட்ட செயலாகவே தோன்றுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் விவகாரத்தில் அருண் ஐ.பி.எஸ். மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், சவுக்கு சங்கர் மற்றும் வராகி உள்ளிட்டோர் தொடர்பான வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த வழக்குகள் பின்னர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
அருண் ஐ.பி.எஸ். வழங்கிய விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். காத்திருப்புப் பட்டியலில் இருந்த அவர் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக பணியாற்றி வருவதை குறிப்பிட்ட நீதிமன்றம், “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டியது.
அதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க, லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமைப் பொறுப்பில் நேர்மையும் நல்ல பொதுப்பெயரும் கொண்ட அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.

