நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், உதகையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தன.
குறிப்பாக, இத்தலாறு, பெம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 100 அடி அகலத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடும் பாதிப்புக்குளாகினர்.
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழிவு பகுதி உருவாகக் கூடும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
இதனிடையே, மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரியில் இன்றும் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்கா ,ரோஜா பூங்கா, அரசு படகு இல்லங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் மரக்காடுகள், படப்பிடிப்பு தளம், 9வது மைல், கேர்னில் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.