Site icon No #1 Independent Digital News Publisher

மாநிலங்களவை சீட் விவகாரம் – தேமுதிக–அதிமுக உறவின் புதியபரிசோதனை!

 

 

பொறுமை என்பது பூமியை ஆளும் என்பதே உண்மைதான். ஆனால் அரசியலில் அது எப்போதும் பயனளிக்குமா என்பது கேள்விக்குறி?

தமிழக அரசியலில், கட்சிகள் இடையே உள்ள கூட்டணிகள் தற்போது வெறும் வாக்குப்பதிவு கூட்டமைப்புகளாக அல்லாமல், அதிகாரப் பங்கீட்டில் உறுதி தரும் உறவுகளாக மாறியுள்ளன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய கருத்துகள், அதிமுகவுடன் நீடித்த உறவில் புதிய பரிசோதனையை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை. தரவில்லை என்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். நாங்கள் பதற்றமின்றி, தெளிவாக உள்ளோம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இக்கூற்று, நேரடியாக அதிமுகவைப் பாதிக்க வேண்டிய அவசியமின்றி, வலிமையான அரசியல் சைகையாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள இடஒதுக்கீடு மற்றும் மரியாதையைப் பற்றிய தேமுதிகவின் எதிர்பார்ப்பை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்கது” என்ற பிரேமலதாவின் கருத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னதாக கூறிய அணுகுமுறைக்கு ஒத்துபோகிறது. இக்கூட்டணியில் தேமுதிக அரசியல் பங்காற்றும் சக்தியாக இருப்பதற்கான உறுதிப்பத்திரம் போலவே இந்த கூற்று அமைகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக ஒரு முக்கிய பங்காற்றும் கட்சியாக இருந்ததற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக வழங்கிய வாக்கு மானிடங்கள் சான்றாகும். இந்நிலையில், மாநிலங்களவை பதவியின்மூலம் அந்த பங்கின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் எதிர்பார்ப்பு.

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போன அதிமுக, தற்போது மாநில அளவில் எதிர்க்கட்சி என்ற நிலையைத் தக்கவைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளை நிலைத்திருத்தும் முயற்சியாக, அவர்களுக்கு உரிய மரியாதையும் பங்கும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மாநிலங்களவை பதவிகள், அரசியல் கட்சிகளுக்கிடையே உள்ள நம்பிக்கையின் அளவுகோலாக மாறியுள்ளன. இது போன்ற வாய்ப்புகள் கட்சிகள் இடையே உள்ள உறவுகளை உறுதியாக்கும் கருவிகளாகவே பார்க்கப்படுகின்றன.

பிரேமலதாவின் கருத்துகள் தேமுதிகவின் எதிர்கால அரசியல் நடைமுறையை உணர்த்துகின்றன. சீட் தரப்பதில் ஆதங்கம் ஏற்பட்டால், தேமுதிக தனி அணியாக செயல்படலாம் என்ற சாத்தியக்கூறுகளும் இக்கூற்றுகளின் பின்னணியில் அடிக்கோடிடப்படுகின்றன.

பொறுமை என்பது அரசியலில் ஒரு நுண்மையான கலை. ஆனால், அதனை தவறாகப் புரிந்து, உரிய சமயத்தில் உரிய மரியாதை வழங்காதால், அந்தப் பொறுமை எதிர்வினையாக மாறும் என்பதும் தெளிவாகிறது.

– ஜனநாயகன்

Exit mobile version