தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல்நலக்குறைவால்
காலமானார். கல்லீரல் புற்றுநோய்க்கு இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீரென தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பவதாரிணியின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா மகள் பவதாரிணி மலையாளத்தில் 1984இல் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். ராசையா, காதலுக்கு மரியாதை, பாரதி, அழகி, ப்ரண்ட்ஸ், கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அமிர்தம், இலக்கியம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பாரதி படத்தில் “மயில் போல” பாடலை பாடியதற்காக தேசிய விருதும் பெற்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா -ஜீவா தம்பதிக்கு மகளாக 1976ஆம் ஆண்டு பிறந்த பவதாரிணி, சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர். தமிழில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராசய்யா’ படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக பவதாரிணி அறிமுகமானார். சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடைசியாக, சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ‘மெஹரசைலா மெஹரசைலா’ பாடலை பாடியிருந்தார்.

இளையராஜா குரலில் வெளிவரும் பாடல்கள் எந்த அளவுக்கு இனிமையாக இருக்குமோ, அதே அளவுக்கு பவதாரிணியின் குரல்வளமும் தனித்துவமிக்கது. குறிப்பாக அவரது குரலில் பாடிய, இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா, என்னை தாலாட்ட வருவாளா போன்ற பல வகையான பாடல்கள் நம்மை இசை உலகிற்கே அழைத்து செல்லும். அவரது மறைவு இசைத் துறைக்கு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது.

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம்வயதிலே ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர். பாடல் கேட்டதும் அடையாளம் கண்டு பரவசமடையச் செய்யும் தனித்துவமான குரலை கொண்டவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகள் செய்திருக்க வேண்டியவர் என கூறியுள்ளார்.

பவதாரிணி மறைவிற்கு மத்திய இணையமைச்சர் L.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, பவதாரிணி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.