சிவகங்கை அருகே கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில், மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான புளூ மெட்டல் குவாரி இயங்கி வருகிறது. சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை 9 மணியளவில் குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர். சிலர் மலையில் டிரில் போட்டு பாறைகளை பெயர்த்தனர். இந்நிலையில் குவாரியில் திடீரென பெரிய அளவில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய மற்ற மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஹர்ஷித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம், முருகானந்தம், என்பது தெரியவந்துள்ளது.
காயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மண்சரிவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்றும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.