அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக கேட்டது. ஆனால், திமுக ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை சொந்த சின்னமான பம்பரத்தில் போட்டியிடுவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் எந்த குழப்பமும் இல்லை. சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் கேட்கும் தொகுதிகள் குறித்து தற்போது எதுவும் சொல்லமுடியாது. வெளிநாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் திரும்பிய உடன், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னாள் எம்எல்ஏவும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்பையா விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பேச்சும் இதை உறுதி செய்துள்ளது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால், விஜய்க்கு கூடுபவர்கள் அப்படி அல்ல. திமுகவை ஒழிப்பதற்கு விஜய் பயன்படுவார் என்றால், அதுதான் என்னை பொறுத்தவரை மிகப்பெரிய தொண்டு என தெரிவித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட போட்டி தேர்வுக்கான திருத்த பாடத்திட்டம் அரசிதழில் வெளியானது. மொழி சிறுபான்மையினரும் இத்தேர்வில் பங்கேற்கும் பொருட்டு, மொழிப்பாடமான தமிழுடன் சிறுபான்மை மொழிப் பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழிகளும் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இத்தேர்வில் மொழி சிறுபான்மைனர் தமிழில் தேர்ச்சி பெறுவது காட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாம் நடிக்கும் புதிய படமான “அஸ்திரம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அரவிந்த் ராஜகோபால் இயக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இந்த போஸ்டரை பார்க்கும்போது இது கேங்ஸ்டர் படமாகவும், நேரத்தை (Time) மையப்படுத்திய கதையாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.