Site icon No #1 Independent Digital News Publisher

27-1-2024 இரவுநேர மிக முக்கிய செய்திகள் “மெட்டாவின் கட்டுப்பாடுகள் முதல் காங்கிரஸ் போராட்டம் வரை”!

சமூக ஊடக பாதுகாப்பு முறைகளை மெட்டா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி டீன் ஏஜ் (13-19) பயனர்களை, மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யாதவர்கள் நேரடி தகவல்களை (DM) அனுப்ப முடியாது. இந்த முறையால் இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயனர்கள் இந்த நடைமுறையை நீக்க பெற்றோரின் அனுமதி அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தனது நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தனக்குத்தானே முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக்
கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என வசனம் பேசிய முதல்வர், தற்போது அதனை
Mortuary-க்கு அனுப்பிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

INDIA கூட்டணியில் மேலும் பல சர்ச்சைகள் உருவாகும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆடம்பர ஓட்டல்களில் தேநீர் அருந்துவது, பத்திரிகையாளர்களை சந்திப்பது ஆகியவற்றின் மூலம் INDIA கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல காட்டுகின்றனர் என விமர்சித்த அவர், கூட்டணிக்குள் ஒரு திட்டத்தை வகுக்காவிட்டால் அரசியல் களத்தில் அவர்களால் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என எச்சரித்தார்.

பாஜகவை வைத்துத் தான் ஒவ்வொரு நாளும் திமுகவின் அரசியலே இயங்கிக் கொண்டிருப்பதாக எம்எல்ஏ வானதி
சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக பூஜ்ஜியம் என்றால், சட்டமன்றத்தில் எதற்காக எங்களது கேள்விக்கு பதில்
அளிக்கிறார்கள். தமிழகத்தில் ஆளும் கட்சி அரசியல் என்பது பாஜகவை எதிர்ப்பதற்காகத்தான். பாஜக இல்லை என்றால் அரசியலே இல்லை என்று திமுகவினர் நினைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தன் வாழ்க்கைக்கு ஒளி காட்டிய மகாத்மா காந்தியின் போதனைகளை என்றும் மதிப்பதாகவும், அவரை தான் அவமதிக்கவில்லை எனவும் ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார். நேதாஜியின் சுதந்திர போராட்ட பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கூறியதாகவும், தனது உரையை தவறாக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியாவின் சுதந்திரத்துக்கு நேதாஜியே காரணம், காந்தி அல்ல’ என ஆளுநர் கூறியிருந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அருள்நிதி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மாறுபட்ட கதைகளில் நடித்து வரும் அவர், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘டிமான்டிகாலனி-2’ ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஏழுமலையான் கோயிலுக்கு அருள்நிதி சென்றார். அவருக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லகுமார், விஜய் வசந்த், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version